Tuesday, April 13, 2021

Self-Confidence - Tamil Speech

அனைவருக்கும் எனது பணிவான வணக்கம்!!

தமிழ்நாடு செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சார்பாக, இன்பத்தமிழ் இல்லத்தரசிகள் குழுவை எமக்கு அறிமுகப்படுத்திய தொகுப்பாளர் திருமதி சாந்தி அவர்களுக்கும், மதிப்பிற்குரிய இயக்குனர் அவர்களுக்கும், தோழி ஷர்மிளா பானுவிற்கும் மனமார்ந்த நன்றி. 

நான் பிறந்து வளர்ந்தது சந்தன மனம் கமழும் சத்தியமங்கலத்தில். புகுந்த வீடு நமது தமிழக முதல்வர் இடைப்பாடி பழனிசாமி அண்ணா பிறந்து வளர்ந்த அதேஊர் - நெடுங்குளம் கிராமம், எடப்பாடி தாலுக்கா. எனது நிரந்தர பணியிடம்  பெங்களூரு. ஆனால் கொரோனவினால் தாய்மண்ணில் ஓராண்டு காலமாக வாசம் செய்ய அரியதோர் வாய்ப்பு கிட்டியது.  

பொறியியல் படிப்பு முடித்து கணிணிப்பணி துவங்கி  இரண்டு தசாப்தங்கள் ஆயிற்று. கணவனின் கைப்பற்றி பதினைந்து வருடங்கள் ஓடிவிட்டது, பிள்ளைகளும் தோள் தாண்டி வளர்க்கின்றனர். தமிழின் உறவு அவ்வப்போது சிறு கவிதைகள் எழுதுவது தவிர பெரும்பாலும் பேச்சு வழக்கிலேயே போயிற்று.

பிறகு எப்படி நாம் தூய தமிழில் பேசுவது அதுவும் தமிழ்நாட்டில் சிறந்த பேச்சாளர்கள், கவிஞர்கள் மற்றும் தமிழ்நாடு செந்தமிழ் சொற்பிறப்பியல் இயக்குனர், தொகுப்பாளர் முன்நிலையில் என்று யோசித்தேன் அப்பொழுதுதான்  எனக்கு இது நினைவுக்கு வந்தது. நான் ஆங்கில வழியில் கணினித்துறையில் பலரை சிறந்த பேச்சாளர்களாக ஆக்கியுள்ளேன். அவர்களுக்கு கூறிய அறிவுரைகளில் ஒன்று, நமக்கு பேசுவதற்கு வாய்ப்பு அளித்து அதற்கு மேடை அமைத்து ஒலிபெருக்கியை கையில் கொடுத்து செவிமடுக்க சிலர் இருக்க வேறு என்ன வேண்டும்? வாய்ப்பை ஒருபோதும் நழுவவிடாதே என்று கூறுவேன்.

அதுவும் எனக்குத் தாய் தமிழால் இணையத்தில் இணைந்த இதயங்கள் இமயம் போல் இருக்கிறார்கள் அல்லவே ?

இன்று நான் பேச எடுத்துக்கொண்ட தலைப்பு தன்னம்பிக்கை!

எனக்கு  முதன் முதலில் செந்தமிழில் பேச தன்னம்பிக்கை தேவைப்பட்டது, அதுவே தலைப்பாக மாறியது. 

ஏழு மாதங்களுக்கு முன் எனது நண்பர் ஒருவர் லண்டனிலிருந்து தொலைபேசி மூலம். இங்கிலாந்தைச் சேர்ந்த குடில் அரட்டை குழு  சார்பாக  சிறுவர்களுக்கான பட்டிமன்றம்  நடத்தலாம் என்று எண்ணுகிறேன் தலைப்பு வேறொன்றுமில்லை தமிழ் மொழியை வளர்ப்பதில் பெரும்பங்கு அளிப்பது தமிழக மாணவர்களா அல்லது அயலக மாணவர்களா. நடுவராக மதிப்பிட்குரிய  திரு.கு.ஞானசம்பந்தன் அவர்கள் வழிநடத்துவார், நமது சகோதரி , பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் ஷர்மிளா பானு அவர்கள் நமக்கு தோள்கொடுப்பர், உமது பிள்ளைகளுக்கு இதில் பங்கேற்க விருப்பமா என்று வினவினார் ?

அடடே பிள்ளைகளுக்கு தமிழுணர்வை ஊட்ட, இதுவ ஒரு நல்ல யோசனையாக தான் இருக்கிறது என்று ஆனந்தத்துடன் பதிவுசெய்து கொண்டோம். 

நானும் எனது மூத்த மகன் சர்வேசும் பட்டிமன்றத்திற்கு தயாரானோம். ஆனால் அதில் ஒரு சிறிய தடுமாற்றம். நாங்கள் வெளிமாநிலத்தில் வசிப்பதால் எனது குழந்தைகளுக்கு தமிழைப் பள்ளிப் பாடமாக படிக்க இயலவில்லை, வீட்டில் தாய் தந்தையின் வாய்ச்சொல்லாலும் தாத்தா பாட்டியின் வழிகாட்டுதலாலும் தமிழைக் கற்கின்றனர். அப்படியிருக்க செந்தமிழில் பேசுவது எப்படி என்று யோசித்தேன்.. முயற்சிப்பது தவறில்லையே ? சர்வேஷுக்கு ஒரு பலமான யோசனை, அம்மா எனக்கு தமிழை, ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்து விடுங்கள் நான் சுலபமாக படித்துக் கொள்வேன் என்றார். 

மகனே ஒவ்வொருவரும் தாய்மொழி வாயிலாகவே பிறமொழியாய் கற்கிறோம் ஆனால் தாய் தமிழில் பேச உனக்கு வேற்று மொழியா ??  உன் மீது எனக்கு பரிபூர்ண நம்பிக்கை இருக்கிறது நான் தமிழிலேயே எழுதி தருகிறேன் - சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம் என்பார்கள். நீ செந்தமிழையும் கற்றுக்கொள்வாய் என்று ஊக்குவித்தோம். நாங்கள் பிள்ளை மீது வைத்த நம்பிக்கை, அவரின் தன்னம்பிக்கையை நீரூற்றி வளர்த்தது, பட்டிமன்றமும் வெற்றியடைந்தது. இன்றும் அவர் பேசிய  அந்தவரிகள் ஆழ் மனதில் பதிந்து ரீங்காரம் இடுவதை நான் உணர்கிறேன். தமிழுக்கு தலை வணங்குகிறேன்!

எப்பொழுதும் வீடு, குழந்தைகள், கணினிப்பணி, தொழில்நுட்ப மாநாடு என்று பரபரப்புடன் இருப்பது என்வழக்கம்.

சிலமாதங்களுக்கு முன்பு ஈடுசெய்யமுடிய இழப்பு ஒன்று, (உடன் பிறந்த உறவின் உயிர் பிரிந்தது) அதிலிருந்து என்னால் வெளிவர இயலவில்லை. இயலாமையைக்கண்டு இடிந்துபோனேன். என்வாழ்வில் இருள் சூழ்ந்தது போன்ற ஒரு உணர்வு.

தேர்வு செய்யப்பட்ட அனைத்து தொழில்நுட்ப மாநாடுகளிலிருந்து விலக ஆரம்பித்தேன். அமேசான் நிறுவனத்தை சேர்ந்து புகழ்பெற்ற "மீண்டும் கண்டுபிடி" என்ற சர்வதேச மேக்கணினி மாநாட்டிலிருந்தும் தொடர்ந்து  இரண்டாவது வருடமாக பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்திருந்தது. அதிலிருந்தும் விலக எத்தனித்தேன், ஆனால் ஒளிபதிவிற்கான  அனைத்துக்கருவிகளும் அமெரிக்காவிலிருந்து அனுப்பிவிட்டார்கள். எல்லா காலக்கெடுவையும் தளர்த்திக்கொள்கிரோம் என்றார்கள். தொழில்முறை பொது பேச்சுப் பயிற்சியாளர், மோண்டன வோன் பிளிஸ் அவர்களின் அறிமுகமும் கிடைத்தது அவருடன் ஒரு தனிப்பயிற்சியும் அமேசான் நிறுவனம் ஏற்பாடு செய்தது. அந்த ஒருமணிநேரக் கலந்துரையாடலில் அவர் கூறிய வார்த்தைகள், "உனது பேச்சில் மேலான கருது இருக்கிறது, ஆனால் விழிகளில் உயிரில்லை, மாநாட்டில் பேசவேண்டும் என்பது உள்ளுணர்விலும் கலக்கவில்லை. இந்த மேக்கணினி மாநாட்டில் நீ எதற்காக பேசவேண்டும் என்பதற்கு ஒரு வலுவான காரணத்தை தேடு, அது உனது நிலையை நிச்சயமாக மற்றும் என்றார். நான் செய்யும் அனைத்து மாநாட்டின் விளக்கக்காட்சிகளும் தன்னார்வத்துடன் கற்ற கலையை பகிரும் நோக்கத்துடனே. அதனால் பொருளாதாரத்திற்கு இடமில்லை, மேலும் பல விருதுகலைக்குவிக்க வேண்டும் என்ற நாட்டமும் இல்லை. 

அந்தத் தேடுதலில் என்னுள் வேரூன்றிய கரணம் ஒன்று கிட்டியது...

சில மேக்கணினி துறை சார்ந்த விருதுகளில் இந்தியாவின் முதல் பெண்மணி என்ற அங்கீகாரம் எனக்கு உண்டு. அதை நன் பெருமைக்காக சொல்லவில்லை ஒரு உதாரணத்திற்காக கூறுகிறேன். சென்ற ஆண்டு நான் பணிபுரியும் இடமான பெங்களூரில் மட்டும் இல்லாமல், சென்னை, கொச்சி, மும்பை, கொல்கத்தா, லாஸ் வேகாஸ் என்று பல்வேறு இடங்களில் நடந்த மாநாடுகளிலும்  நேரடியாக சென்று பங்கேற்று விளக்கக்காட்சியளித்தேன் . அதில் பல பெண்கள், என்னை முன்னுதாரணமாகக் கொண்டு கணினித்துறையில் முன்னேற வேண்டும் என்றார்கள். தொழில்நுட்பத்தில் உள்ள பெண்களுக்கு ஒரு உதாரணமா இருந்து, மேன்மேலும் பலரை ஊக்குவிக்கவேண்டும் என்று எண்ணினேன். அதுவே எனது தன்னம்பிக்கைக்கு பலம் கொடுத்து, அமேசானின் "மீண்டும் கண்டுபிடி" என்ற மாநாட்டிற்காக அருமையான ஒளிப்பதிவை முடிக்கவும் உதவியது. 

அந்த உந்துதலும் புத்துணர்ச்சியும் நெடுநாள் நீடிக்கவில்லை. மறுபடியும் பின்னடைந்தேன். 

சென்ற மகளிர் தினம் நெருங்கிக்கொண்டிருந்தது, 

விடையில்லாத கேள்விகளும், தீர்வில்லாத பிரச்சினைகளும் எல்லோருடைய வாழ்விலும் உண்டு.

எவ்வளவு முயன்றும் மாற்ற முடியாத விஷயங்களை அதன் இயல்பென ஏற்றுக்கொண்டு கடந்து செல்வோம் என்று எண்ணினேன். அதை ஆணித்தரமாக என்னுள் பதிவிட எனக்கு ஒரு சுய உந்துதல் தேவைப்பட்டது.  தமிழன்னையை வணங்கி என்மீது நம்பிக்கை வைக்க, தன்னம்பிக்கையை தழைத்திட ஒரு சிந்தனையைத் தூண்டும் கவிதையை எழுதினேன். இதோ உங்களுக்காக 

எழுந்திரு மகளே,

வீறு கொண்டு எழுந்திரு மகளே 

பொறுத்தது போதும், பொங்கியெழு;

தாழ்ந்தது போதும், தலை நிமிர்ந்து நில்.


பிறந்தோம், வளர்ந்தோம், மடிந்தோம் என்றிருந்திடாதே, 

வாழ்வதும் வீழ்வதும் உன்கரத்தில்.


காலத்திற்கேட்ப வாழ பழகிக்கொள் - ஆனால்

கண்ணீரில் கரைந்து 

காலனை கைதொழாதே.


உரியவருக்கு உதவிக்கரம் நீட்ட போதித்த உலகம் 

உற்ற நேரத்தில் உதவியை நாட ஊக்குவிக்கவில்லையோ ?

வேதனையில் கிடந்து வாடுவது 

விதியென்று எண்ணாதே,

மாற்றங்களை எதிர்பார்த்து மண்டியிடாதே,

யுகா மாற்றம் உன்னில் இருந்து துவங்கட்டும்

அதுவும் இன்றே நன்றே துவங்கட்டும்.


பூக்கும் புன்னகைக்கு பின்னால்

புலப்படாத வேதனைகள் பலவுண்டு, 

புற்றீசலைப் போல் தோன்றிமறையாமல் 

பூர்ணத்துவம் அடைவாய்.


நீ நீயாக இருக்க, 

நிமிர்ந்து நின்று,

தடைகளைத் தகர்த்து,

முன்னேறிச்செல்.

வழியில் வரும் தடைகள் படிக்கற்களாகும்;


வன்சொற்கள் வாழ்த்தாகும்;

இறுதியில் வெற்றி உமதாகும்.


நீ ஓடிக்கொண்டே இரு 

உனது வாழ்வின் லட்சியம் அடையும்வரை ஓடு.


புறப்படு மகளே

புதியதோர் ஆரம்பம் 

உனக்காக காத்திருக்கிறது !!


வெற்றி வந்தால் மட்டும் தன்னம்பிக்கை வரும் என்றில்லாய். 

ஆளைக் கொல்லும் கவலைகளைப் புறந்தள்ளி ஆளுமையைத் தரும் தன்னம்பிக்கையை ஆடையாக அணியஎண்ணினேன்.

தாய்த்தமிழ் கொடுத்த அந்த தன்னம்பிக்கை, என்னை எனக்கு மீண்டும் அடையாளம் காட்டியது, இன்று உங்கள் முன் செந்தமிழிலும்  பேச வைத்தது. 

சித்திரை திருநனில் எனக்கு இதை விட பேரானந்தம் வேறென்ன ?


இதிகாசங்களை விட நமக்கு சிறந்த படம் கற்பிக்க ஒன்றும் இல்லை 

விண்ணைத்தொடும் வேள்வியில் உதித்த திரௌபதிக்கே 

எண்ணிலடங்கா துயரங்களும் தோல்விகளும் 

என்னிலையிலும் தன்னிலை மாறாமல் 

இறுதிவரை தருமத்தை நிலைநாட்ட 

அகிலத்து நன்மைக்காக போராடி 

அதில் வெற்றியும் அடைந்தார். 

தரணியில் அவதரிக்கும் பெண்ணினம் போற்றப்படவேண்டும் 

தூற்றும் துஷ்டர்கள் துவம்சம் செய்யப்படுவேண்டும் 

என்று உறுதிபூண்டிருந்தார். 

அதற்க்கு முழு முதற்க்காரணம் 

தன்னம்பிக்கை மேலோங்கியிருந்தது தான்.

ஒரு நாட்டில்  அரசன் ஒருவன் நல்லாட்சி செய்து வந்தான். மக்கள் செல்வச் செழிப்புடனும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தனர். அமைச்சர்கள் அரசனுக்குச் சரியான முறையில் பிரச்னைகளை எடுத்துச் சொல்லி, அவற்றைக் களைய ஆர்வம் காட்டினர். தனது ஒரே மகளுக்கு தீரமிக்க ஒருவனை மணமுடிக்க எண்ணினார்.

`ஒரு போட்டி வைத்து, இளவரசரைத் தேர்ந்தெடுக்கலாம்' என்றார்கள் அமைச்சர்கள். அதன்படி, `ஒரு சிறிய குளத்தை வெட்டி, அதில் விஷ பூச்சிகளை போட வேண்டும். அந்தக் குளத்தில் குதித்து, யார் ஒருவர் நீந்தி மேலே வருகிறாரோ அவரே நம் இளவரசர். அரசர் அவருக்கு மகளை மணம் முடித்துத் தந்து அரசப் பட்டத்தையும் சூட்டுவார்’ என்றும் போட்டிக்கான விதிகளை வகுத்தனர். அரசனும் அவர்களின் ஆலோசனையை ஏற்றார். அதன்படி, ஒரு குறிப்பிட்ட நாளில் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது. எல்லா நாடுகளுக்கும் அறிவிப்பு ஓலையை அனுப்பி வைத்தார் அரசர்.

அரசனின் மகள் பேரழகி. அவளைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் பல நாட்டு இளவரசர்களும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டிருந்தனர். இந்த அறிவிப்பு அவர்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. அரசர் வைத்துள்ள போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளதாக, அவர்களும் பதில் ஓலையை அனுப்பி வைத்தனர்.

போட்டிக்கான  நாளும் வந்தது. ஒரு பெரிய மைதானத்தில் நாட்டு மக்கள் எல்லோரும் தங்களுடைய புதிய இளவரசரைக் காண்பதற்காக ஆவலோடு திரண்டிருந்தனர். அந்த மைதானத்தின் நடுவே சுமார் 600 அடி நீளத்துக்கும் 500 அடி அகலத்துக்கும் 100 அடி ஆழத்திற்குப் பெரிய அளவில் குளம் வெட்டப்பட்டிருந்தது. சுற்றிலும் பாதுகாப்பு வீரர்கள் நிற்க வைக்கப்பட்டிருந்தனர். அதில் தண்ணீர் நிரப்பி, விஷ பூச்சிகள் மற்றும் முதலைகளும்  விடப்பட்டிருந்தன. எது கிடைத்தாலும் அவற்றை ஒரேயடியாக விழுங்கிவிடக் கூடிய முதலைகள் அவ்வப்போது தலைகாட்டிக்கொண்டிருந்தன. மக்கள் அவற்றைப் பார்த்து பயந்தனர். 

அரசனும் அரசியும் அவர்களது மகளும் மைதானத்தின் முன்பக்கம் போடப்பட்டிருந்த மேடையின் மீது உட்கார்ந்திருந்தனர். அமைச்சர்களுடன் உடன் இருந்தனர். புதிய இளவரசருக்கான கிரீடம் நேர்த்தியான முறையில் உருவாக்கப்பட்டு, பட்டுத் துணி ஒன்றின் மீது எல்லோரது பார்வையும் படும் வகையில் உயரமாக அமைக்கப்பட்ட தூண் ஒன்றின் மீது வைக்கப்பட்டிருந்தது.

தங்களது படை பரிவாரங்களோடு இளவரசர்கள் போட்டி போட்டுக்கொண்டு மைதானத்துக்கு வந்தனர். பலர் குளத்தில் பசியோடு அலையும் விஷ ஜந்துக்களைப் போட்டு வைத்திருப்பதை அறிந்துகொண்டு, பத்தடி தூரத்துக்கு முன்னாலே யு-டர்ன் போட்டுத் திரும்பி ஓடினர். அரசருக்கு மேலும் கவலையாகிவிட்டது. 

திடீரென மக்கள் ஆராவாரத்துடன் சத்தம் எழுப்பினர். அரசனும் அரசியும் நிமிர்ந்து மக்களைப் பார்த்தனர். ஒருவன் மட்டும் பள்ளத்தை நோக்கி, முன்னால் வந்து நின்றான். அடுத்து, அவன் பள்ளத்தில் இறங்கியே ஆக வேண்டும். மக்கள் `முன்னேறிச் செல்லுங்கள்... முன்னேறிச் செல்லுங்கள்' என்று கோஷமிட்டனர். வேறு வழியே இல்லை. அவன் பள்ளத்தில் குதித்தே ஆக வேண்டும். அவன் அடுத்த அடியை எடுத்து, வைப்பதற்குள், அரசர் `அப்படியே நில்...’ என்று கட்டளையிட்டார். 

எல்லோரும் அமைதியாகி விட்டனர். `அரசருக்கு என்னாச்சு... போட்டியை எதற்காக நிறுத்தச் சொல்கிறார்' என்று அமைச்சர்களும் மக்களும் குழம்பினர். `போட்டி முடிந்துவிட்டது... நமக்கு இளவரசர் கிடைத்துவிட்டார்’ என்றார் அரசர். 

அரசிக்கு கோபம்...  `போட்டியில் வெற்றிபெறுவதற்கு முன்னரே எப்படி அவர்தான் நம் இளவரசன் என்று முடிவு செய்தீர்கள்?’ என்று கேட்டாள். `போட்டியில் வெற்றி பெறுவது முக்கியமல்ல... பங்கேற்பதுதான் முக்கியம். எல்லோரும், பங்கேற்பதற்கு முன்னரே ஓடிவிட்டனர். ஆனால், தன்னம்பிக்கையுடன் போட்டியில் பங்கேற்றதாலே அவரைத் தேர்ந்தெடுத்தேன். எனக்குத் தெரியும். அந்தப் பள்ளத்தில் விழுந்தால் ஒருவர் உயிரும் மிஞ்சாது’ என்றார். அரசி, அவரின் விவேகத்தைக் கண்டு வாய்பிளந்து நின்றாள். 

கதையின் கருத்து, தன்னபிக்கைக்கு கிடைத்த பரிசு, அரசனின் மகளும், அரசாளும் உரிமையும்.

இவ்வாறாக குறி நான் என் உரையை முடிக்கின்றேன் 

நீ வீழ்ந்த போது தாங்கிப்பிடிக்கும் கை 

உன் மனம் உடையும்போதெல்லாம்  தட்டிக்கொடுக்கும் கை

தனியே நீ அழும்போதெல்லாம் உன் கண்ணீரைத்துடைக்கும் கை 

அது வேறு எவருடைய கையும் அல்ல 

உன்னுள் வீற்றிருக்கும் உனது தன்னம்பிக்கை 

அதை ஒருபோதும் இழந்து விடாதே!!

பிழையிருந்தால் பொருத்தருளவும்; பிடித்திருந்தால் என்னை செந்தமிழில் பேசவைத்த பெருமை தாய்த்தமிழையும், இன்பத்தமிழ் இல்லத்தரசிகள் குழுவையும் சாரும்.

வாய்ப்புக்கு நன்றிபாராட்டி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம் 

புகைப்படங்கள்