Sunday, March 7, 2021
Happy Women's Day
Wake Up my Girl - எழுந்திரு மகளே!!
வீறு கொண்டு எழுந்திரு மகளே
பொறுத்தது போதும், பொங்கியெழு;
தாழ்ந்தது போதும், தலை நிமிர்ந்து நில்.
பிறந்தோம், வளர்ந்தோம், மடிந்தோம் என்றிருந்திடாதே,
வாழ்வதும் வீழ்வதும் உன்கரத்தில்.
காலத்திற்கேட்ப வாழ பழகிக்கொள் - ஆனால்
கண்ணீரில் கரைந்து
காலனை கைதொழாதே.
உரியவருக்கு உதவிக்கரம் நீட்ட போதித்த உலகம்
உற்ற நேரத்தில் உதவியை நாட ஊக்குவிக்கவில்லையோ ?
வேதனையில் கிடந்து வாடுவது
விதியென்று எண்ணாதே,
மாற்றங்களை எதிர்பார்த்து மண்டியிடாதே,
யுகா மாற்றம் உன்னில் இருந்து துவங்கட்டும்
அதுவும் இன்றே நன்றே துவங்கட்டும்.
பூக்கும் புன்னகைக்கு பின்னால்
புலப்படாத வேதனைகள் பலவுண்டு,
புற்றீசலைப் போல் தோன்றிமறையாமல்
பூர்ணத்துவம் அடைவாய்.
நீ நீயாக இருக்க,
நிமிர்ந்து நின்று,
தடைகளைத் தகர்த்து,
முன்னேறிச்செல்.
வழியில் வரும் தடைகள் படிக்கற்களாகும்;
வன்சொற்கள் வாழ்த்தாகும்;
இறுதியில் வெற்றி உமதாகும்.
நீ ஓடிக்கொண்டே இரு
உனது வாழ்வின் லட்சியம் அடையும்வரை ஓடு.
புறப்படு மகளே
புதியதோர் ஆரம்பம்
உனக்காக காத்திருக்கிறது !!